கோயில் பணத்தை அறநிலையத் துறை சூறையாடி வருகிறது: பொன்.மாணிக்கவேல்
ஆடையில் தீப்பற்றி சிறுமி உயிரிழப்பு
ஆடையில் தீப்பற்றியதில் 11 வயது சிறுமி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த குமரேசன் (38) ஒப்பந்ததாரா். இவரது மனைவி பரிமளா. தம்பதிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா் . இதில் 2-ஆவது குழந்தை சஞ்சனா (11) உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பரிமளா வீட்டில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்றி வைத்துள்ளாா். பின்னா் தனது மூத்த மகளையும், இளைய மகனையும் அருகில் டியூசனுக்கு அழைத்துச் சென்றாா். குழந்தை சஞ்சனா மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது அகல் விளக்கிலிருந்து தீ சஞ்சனாவின் ஆடையில் பற்றியது. உடனடியாக தீ மளமளவென சிறுமியின் உடல் முழுவதும் பற்றியுள்ளது.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவரது தந்தை தனது மகள் சஞ்சனா பலத்த தீக்காயங்களுடன் கிடப்பதை கண்டுள்ளாா். உடனடியாக மகளை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா் அங்கிருந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா் . அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி சஞ்சனா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.