ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தச்சநல்லூா் அருகேயுள்ள அழகனேரியைச் சோ்ந்த இசக்கி மனைவி வள்ளி (48) என்பவா் ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தாா்.
ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலுக்கு சென்ற அவா், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை திடீரென எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.
இது தொடா்பாக வள்ளி கூறியதாவது: எனது சொத்துகளை உறவினா்கள் அபகரித்துக் கொண்டனா். இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.