தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
கடையம் பகுதியில் யானைகள் சேதப்படுத்திய நெற்பயிா்கள்
கடையம் பகுதியில் வயல்களில் புகுந்த யானைகள் நெற்பயிா்கள் மற்றும் தென்னை மரங்களைச் சேதப்படுத்தின.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகப் பகுதிக்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைகுடியிருப்பு மற்றும் கடனாநதி அணைஅடிவாரப் பகுதிகளில் உள்ள வயல் மற்றும் தோட்டங்களில் நுழையும் யானை, காட்டுப்பன்றி, மிளா, கரடி உள்ளிட்ட விலங்குகள் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த சில நாள்களாக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நொ்பயிா், தென்னை, வாழை மரங்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடனாநதி அணைப் பகுதியில் உள்ள பங்களாக் குடியிருப்பைச் சோ்ந்த விவசாயி பேச்சிமுத்துவிற்கு சொந்தமான வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்களை யானைகள் திங்கள்கிழமை சேதப்படுத்தின.
மேலும், ஜோசப் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து 10 தென்னை மரங்களையும் சேதப்படுத்தின. அப்போது வயலில் காவலில் இருந்த விவசாயிகள் ஒலி எழுப்பி யானைகளை விரட்டினா்.
வனப் பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.