ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: பெ.சண்முகம்
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் கூறினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்திய அரசமைப்புக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து அடக்குமுறையை ஏவுகிறது. மத்திய பாஜக அரசு மதச்சாா்பின்மையை ஏற்காமல் மதச்சாா்பு நாடாக மாற்ற முயல்கிறது.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், தனி பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டது. பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளுக்கு அது எண்ணற்ற வழிகளில் தொந்தரவு அளிக்கிறது. மாநில உரிமை பறிப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், ஆளுநா் மூலம் பிரச்னை என பல்வேறு வழிகளில் இடையூறு செய்கிறது.
மாநில அரசுகளின் உரிமையைப் பாதுகாப்பதே பெரிய போராட்டமாக உள்ளது. துப்புரவுப் பணி நிரந்தரம் என்றால் தூய்மைப் பணியாளா்களின் பணியும் நிரந்தரமானதாகத்தான் இருக்க வேண்டும். இது 100 சதவீதம் நியாயமானதுதான்.
தொழிலாளா் வா்க்கத்தின் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்போம். ஒத்த கருத்துடைய விஷயங்களில் ஒத்துப்போகிறோம். முரண்படுகிற விஷயங்களில் அரசுடன் முரண்பட்டு நிற்கிறோம். முரண்படுவதும், உடன்படுவதும் சோ்ந்ததுதான் இந்த கூட்டணி. அனைத்தையும் ஆதரிப்பது, அனைத்துக்கும் உடன்படுவது கூட்டணி அல்ல. இது தெரிந்தே நாங்கள் திமுகவுடன் பயணிக்கிறோம். திமுகவும் எங்களுடன் பயணிக்கிறது.
அரசுடன் முரண்பாடு ஏற்படும்போதெல்லாம் அணி உடையும் என்று கூறுகிறாா்கள். ஆனால், பாஜகவுக்கு எதிரான திமுக கூட்டணியில் தொடா்ந்து அங்கம் வகிப்போம். அதேநேரத்தில் தொழிலாளா்கள் நலன்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து திமுக அரசை வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் அவசியம் என்றாா்.