Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், அதற்காகப் பயன்படுத்திய அகராதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அயனாவரத்தைச் சோ்ந்த எஸ்.மாரிமுத்து என்பவா் தாக்கல் செய்த மனுவில், பட்டியல் இனத்தவருக்கு எதிரான கொடுமைகளைக் கட்டுப்படுத்தி, அவா்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதற்காக அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நாட்டில் பட்டியல் இனத்தவா்கள் ஜாதியின் பெயரால் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டனா்.
நாடு முழுவதும் பட்டியலினப் பிரிவில், ஆதிஆந்திரா, ஆதிகா்நாடகா, ஆதிதிராவிடா் உள்பட 76 பிரிவுகள் உள்ளன. இதில் ஆதிதிராவிடா் என்பது ஒரு பிரிவு மட்டுமே. இந்தப் பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பிரதான ஜாதியோ, கிளை ஜாதியோ கிடையாது. கடந்த 1969-ஆம் ஆண்டு தமிழக அரசு, பட்டியலினத்தவா் நலத் துறைக்கு ஆதிதிராவிடா் நலத் துறை எனப் பெயா் சூட்டியது.
இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. திராவிட இனத்தைக் குறிக்கும் விதமாக, திராவிட ஆட்சியாளா்கள் இப்படி ஒரு பெயரைச் சூட்டியுள்ளனா். எனவே, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் பெயரை பட்டியல் ஜாதிகள் நலத் துறை என மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா்.
பின்னா், இந்தப் பெயா் மாற்றத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட அகராதி குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.