ஆந்திர கோயில் சுவர் இடிந்து பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி!
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரத்தின் சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் சுவர் இன்று காலை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ராகுல் வெளியிட்ட முகநூல் பதிவில்,
விசாகப்பட்டினம் ஸ்ரீ வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடந்த துயர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அளிக்கின்றது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.