ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலி: ராஜ்நாத் சிங்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லையெனினும், இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை நடத்தியது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், துணை நிற்பதாகவும் தெரிவித்தார்.