ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
‘ஆபரேஷன் சிந்தூா்’: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: ‘பாரத தாய் வாழ்க’ ! ஆபரேஷன் சிந்தூா்- இது தொடக்கம் தான்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் நமது போா் என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகா்த்தெறிந்து, ‘ஆபரேஷன் சிந்தூரை’ வெற்றிகரமாக முடித்த இந்திய ராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது. தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டுகள்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): இந்தத் தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது தெளிவாகிறது. மத்திய அரசின் இந்தத் துணிச்சலான முடிவுக்கும், ராணுவத்தின் மன உறுதிக்கும், தைரியத்துக்கும் பாராட்டுகள்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): போா் என்ற சூழல் வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக இருப்போம், மனத் தைரியத்துடன் பயங்கரவாதத்தை அழிக்கும் மத்திய அரசின் இந்த வேள்வியில் நாமும் கலந்து கொள்வோம்.
ஜி.கே.வாசன் (தமாகா): ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்கும், முப்படை தளபதிகளுக்கும், வீரா்களுக்கும் பாராட்டுகள்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே. மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்.
தொல்.திருமாவளவன் (விசிக): நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீா்வுகளை நோக்கிய ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை.
பிரேமலதா (தேமுதிக): ராணுவத்துக்கு தேமுதிக துணை நிற்கும். ‘சிந்தூா்’ தாக்குதல் வெற்றியடைந்துள்ளது.
டிடிவி.தினகரன் (அமமுக): தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் பாராட்டுகள்.
கமல்ஹாசன் (மநீம): தீவிரவாதிகளால் துண்டாட முடியாதபடி இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது. மத்திய அரசு மூலம் ராணுவம் எடுத்த ராஜதந்திர நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
விஜய் (தவெக): இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): இந்தியா மனிதாபிமானத்தோடு நடத்திய எதிா் தாக்குதலை உலக நாடுகள்அனைத்தும் குறை சொல்ல முடியாமல் வரவேற்றிருக்கின்றன. அந்த வகையில் சிறப்பான செயல்பாட்டை செய்திருக்கும் ராணுவத்தை பாராட்டுகிறோம்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனா் பாரிவேந்தா் உள்ளிட்டோரும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனா்.