ஆப்கன்: `பெண்கள் வசிக்கும் வீடுகளில் ஜன்னல்கள் கூடாது...' - தாலிபன் அரசின் புது உத்தரவு சொல்வதென்ன?
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொது இடங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்குப் பெண்கள் செல்ல தடை, பெண்கள் உயர் கல்வி பயில தடை, பொது இடங்களில் பாடுதல், கவிதை வாசித்தல் போன்ற செயல்களில் பெண்களுக்குத் தடை என நடவடிக்கைகளை மேற்கொண்டது தாலிபன் அரசு.
இந்த நிலையில், பெண்கள் குடியிருக்கும் வீடுகள், கட்டடங்களில் ஜன்னல் வைக்கத் கடை விதித்து, ஏற்கெனவே இருக்கும் ஜன்னல்களை அடைக்குமாறு தாலிபன் அரசு உத்தரவிட்டிருக்கிது.
இது தொடர்பாக, தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஐபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தளத்தில், ``பெண்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் சமையலறைகள், முற்றங்களில் வேலை செய்தல், கிணறுகளில் தண்ணீர் இறைத்தல் போன்ற செயல்களை மற்றவர்கள் பார்ப்பது தவறான செயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே பெண்கள் குடியிருக்கும் கட்டடங்களில் ஜன்னல்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஜன்னல்கள் பொருந்திய வீடுகள் அமைந்திருந்தால், ஜன்னல்கள் மறைக்கும்படி சுவர்கள் எழுப்ப வேண்டும் அல்லது மற்ற முறைகளைப் பயன்படுத்தி ஜன்னல்களை மறைக்கும்படியான செயல்களைச் செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், மற்றவர்களால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளிலிருந்து தவிர்ப்பதற்காகவும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், குடியிருப்புகளில் பக்கத்து வீட்டாரின் பார்வை தடுக்கப்படும் வகையில் கட்டடங்கள் அமைவதை உறுதி செய்ய ஊராட்சி அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய துறையில் இருக்கும் அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...