மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
இதுமாதிரி அடி வாங்கியதில்லை..! ரிஷப் பந்த் பேட்டி!
சிட்னி பிட்ச் சரியாக இல்லாத்தால் தன்னால் எப்போதிருந்து அதிரடியாக ஆட வேண்டுமென முடிவெடுக்க முடியவில்லை என இந்திய வீரர் ரிஷப் பந்து கூறியுள்ளார்.
சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 98 பந்துகள் விளையாடி 40 ரன்கள் எடுத்தார்.
ரிஷப் பந்த் இந்த இன்னிங்ஸில் ஆஸி. பந்துவீச்சாளர்களால் பலமுறை உடலில் அடிவாங்கினார். ஒருமுறை கையில் பந்து தெரியுமளவுக்கு அடி வாங்கினார். பின்னர் ஹெல்மெட்டில், அடுத்து வயிற்றிலும் அடி வாங்கினார்.
கடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியிலும் நன்றாக விளையாடிய ரிஷப் பந்த் திடீரென அதிரடியாக ஆரம்பித்து ஆட்டமிழப்பார். அதற்காக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்தபிறகு ரிஷப் பந்த் இது குறித்து பேசியதாவது:
அதிரடியாக விளையாட திட்டமிட முடியவில்லை
இந்த இன்னிங்ஸில் நான் எங்கிருந்து அடிக்க துவங்க வேண்டுமென திட்டமிடவே இல்லை. ஏனெனில் பிட்ச் அந்தமாதிரி இருந்தது. நாங்களும் அந்தமாதிரியான சூழ்நிலையில்தான் இருந்தோம்.
50-50 வாய்ப்புதான் என்பேன். ஏனெனில் நான் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயேகூட அடித்திருக்கலாம். ஆனால், சில நேரம் பாதுக்காப்பான கிரிக்கெட் விளையாட வேண்டியிருக்கும்.
இந்த நேரத்தில் ஒரு விக்கெட் இழந்தால் தொடர்ச்சியாக 2-3 விக்கெட்டுகள் விழுமெனத் தெரியும். அதனால்தான் நான் பாதுக்காப்பாக விளையாடினேன்.
நான் ஆட்டமிழந்த நேரத்தில் அடித்து ஆட வேண்டிய நேரம்தான். ஆனால், அது உள்ளிருந்து வரவேண்டும். நான் இப்படி ஆட வேண்டுமென முன் தீர்மானித்து விளையாட முடியாது.
போட்டி என்னிடம் என்ன கேட்கிறதோ, நான் அதைச் செய்வேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.
எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது
நான் விளையாடுவதில் எளிமையை கடைப்பிடிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதில்லை. ஏனெனில் தொடரில் ரன்கள் குவிக்காதபோது நாம் அதிகமாக சிந்திப்போம்.
வயிற்றில் அடிவாங்கியது வலித்தது. ஆனால், இந்தத் தொடருக்கு அது தேவையானது. அணிக்காக நாம் கடினமாக உழைத்தாக வேண்டும். நான் எங்கு அடிக்கிறேன் என்பது குறித்து சிந்திப்பதில்லை என்னுடைய சிறந்த திறனை நம்பி பந்தினைப் பார்த்து விளையாடுகிறேன்.
இந்த இன்னிங்ஸில் மட்டுமே அதிகமுறை உடலில் அடிவாங்கியிருக்கிறேன். கிரிக்கெட்டில் நம்மால் எல்லா பந்துகளையும் விளையாட முடியாது. கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறையாவது நமக்கு இப்படியாக நடக்கும். அது எனக்கு இன்று நடந்தது. இது குறித்து அதிகமாக சிந்திக்கவில்லை.
185 ரன்கள் போதுமானதில்லை. 220- 250 ரன்கள் நல்ல இலக்காக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் போராடுவோம். பிட்ச்சில் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருந்தது. எங்களுக்கும் அதேபோல் இருக்கும் என நினைக்கிரேன்.
டெஸ்ட்டில் மோசமான பந்துக்காக காத்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த ஆஸி. அணிக்கு எதிராக அவை குறைவாகவே கிடைக்கும். இருப்பினும் ரன்கள் குவிக்க நாம் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.