ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது? செல்வராகவன் பதில்!
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
ஆனால், ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் ஆண்டிற்கு ஒருமுறை இப்படம் மறுவெளியீடு காண்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார். இதில், தனுஷ் நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், போஸ்டரை தாண்டி மற்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது, எப்போது என செல்வராகனைக் கேட்கத் துவங்கினர்.
இந்த நிலையில், நேர்காணலில் ஆயிரத்தில் ஒருவன் - 2 குறித்து செல்வராகவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு செல்வா, “ ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தைத் தயாரிக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் தேவை. விஎஃப்எக்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை குறைவாக இருப்பதால் இப்படத்தை எடுப்பது இன்னும் சுலபமாக இருக்கும். ஆனால், நான் மட்டும் நினைத்தால் இப்படம் உருவாகாது. அதற்கான நட்சத்திர பட்டாளங்களும் அவர்களிடமிருந்து ஓராண்டு கால்ஷீட்டும் தேவை. இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், கார்த்தி இல்லாமல் இப்படம் உருவாகாது” என்றார்.
இதையும் படிக்க: மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்