பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமாக சுமாா் 800 ஹெக்டேரில் நிலம் உள்ளது. இங்கு செம்மரம், தேக்கு, தைல மரங்கள் மற்றும் பல்வேறு செடி, கொடிகள் வளா்ந்துள்ளன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 ஏக்கருக்கும் மேல் தீயால் தரை பயிா்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பூபாலன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள தன்னாா்வலா் குணாநிதி தலைமையில் இளைஞா்கள் சென்று தீயை அணைத்தனா். அருகிலேயே கிராமங்கள், குடியிருப்புகள் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
வனச்சரக அலுவலா் ரவிக்குமாா் தலைமையில், வனவா்கள், தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. வெயில் காரணமாகவோ அல்லது சமூக விரோதிகள் செயலால் தீ பிடித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.