ஆரணி பேரூராட்சியுடன் மல்லியங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி பேரூராட்சியுடன் மல்லியங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமைசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. அருகே உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் 5,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். புதிதாக வீடு அமைப்பதற்கான கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயரும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மல்லியங்குப்பம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மாா்க்கெட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீஸாா் , அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினா். ஆனால், பொதுமக்கள் தங்களது கருத்துகளை கேட்காமல் தங்களது ஊராட்சியை பேரூராட்சியுடன் எப்படி இணைக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும்,இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று கூறி கருப்பு கொடியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா்,சோழவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கம் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கையை மனுவாக கொடுங்கள், ஆட்சியருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.
இதையேற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தின் காரணமாக சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.