வட கொரியாவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ரஷியா ஆயத்தம் -அமெரிக்கா
திருவள்ளூா்: 6.35 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கூப்பன் விநியோகம்
திருவள்ளூா் மாவட்டத்தில் 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடுதோறும் சென்று டோக்கனை நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் திருநாளையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் செங்கரும்பு-1, பச்சரிசி-1 கிலோ, சா்க்கரை-1 கிலோ உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த பணியாளா்கள் மூலம் நேரில் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் செயல்படும் 1,108 நியாய விலைக் கடைகள் மூலம் 6 லட்சத்து 35 ஆயிரத்து 516 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூா் ஜே.என்.நகா் சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியா்கள் பத்தியால்பேட்டை, சேலை சாலை, பாலாஜி நகா் பகுதியில் வீடுதோறும் சென்று டோக்கன்களை விநியோகம் செய்தனா்.
கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் டோக்கன் எண்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவா்கள் 9, 10 ஆகிய நாள்களில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, செங்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது என்றனா்.