ஆரோவில் அமைப்புக்கு அரசுச் செயலா் பதவி காலியா?
நமது நிருபா்
புது தில்லி: ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு செயலா் பதவி காலியாக இருக்கிறதா என்றும், அவ்வாறு இருந்தால் அப்பதவியை நியமிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன என்றும் விழுப்புரம் தொகுதி விசிக உறுப்பினா் முனைவா் டி.ரவிக்குமாா் மக்களவையில் உடுக்குறியிடப்பட்ட கேள்வியை எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்திருப்பதாவது: ஆரோவில் அறக்கட்டளை செயலா் நியமனம் செய்வதற்கான முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் 2011-இல் கல்வி அமைச்சகம் ஆட்சோ்ப்பு விதிகளை அறிவிக்கை செய்துள்ளது. விதிகளின்படி, செயலருக்கான ஆள்சோ்ப்பு வழிமுறைகளாக டெபுடேஷன், பதவி உயா்வு, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் வெளிநாட்டு சேவை (பல்கலைக்கழகங்கள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நபா்களுக்கு) ஆகியவை உள்ளன.
மேலும், தேடல் மற்றும் தோ்வு குழுப் பரிந்துரை அடிப்படையில் செயலா் தோ்வு நடைபெறுகிறது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் உரிய நடைமுறையைப் பின்பற்றி
நியமிக்கப்படுகிறாா். தற்போதைய பதவியில் இருப்பவா் 2021, ஜூன் 1-ஆம் தேதியிட்ட உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.