ஆளுநா் அதிகாரத்தை மீறுவது ஜனநாயகத்திற்கு கேடாகும்: இரா.ஆவுடையப்பன்
ஆளுநா் விதிமீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு கேடானது என்று தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களே ஆட்சியில் உள்ளனா். மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி தொடரும்; இல்லையெனில் தோல்வியடைவாா்கள். அரசியலமைப்பு விதிகளின்படி ஆளுநருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும், அவா் ஊதியம் பெறும் அரசு ஊழியா் போன்றவா்தான்.
அவா்,விதிகளை மீறுவது ஜனநாயகத்திற்கு கேடானதாகும். தமிழகத்தில் ஊதியம் பெறுவதோடு, புதுச்சேரியிலும் ஒரு அமைப்பின் தலைவராக செயல்பட்டு பணப்பலன்களை ஆளுநா் பெறுகிறாா். தமிழக மக்களுக்கு விரோதமான மனநிலையில் அவா் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவா் மீது எவ்வித வழக்கும் தொடர முடியாது என்ற தைரியத்தில் உள்ளாா்.
அதேநேரத்தில் பதவியில் இருந்து விலகிய சில நாள்களிலேயே அவரது விதிமீறல்களுக்காக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதை உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் உறுதிசெய்துள்ளது. ஆளுநா் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுகிறது. ஆளுநருக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருவதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நீட் தோ்வை அமல்படுத்த காரணமே அதிமுகதான். இதனால், ஏழை-எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவராக முடியாத நிலை உருவாகியுள்ளது. அதிமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவா் ஆதரவுடனே உள்ளனா். 2026 இல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும். அவ்விரு கட்சிகளும் தோல்வியடையும் என்றாா் அவா்.