ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 3வது நாளாக தொடரும் மீட்புப்பணி!
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகின்றது.
தௌசா மாவட்டத்தில், கலிகாட் கிராமத்தில் டிச.9 அன்று 5 வயது சிறுவன் ஆர்யன் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
சம்பவ இடத்துக்கு வந்த தேசிய மீட்புப் படையினர், சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுவன் 150 அடியில் சிக்கியுள்ள நிலையில், குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலம் சிறுவனின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
துளையிடும் இயந்திரங்கள் 110 அடி வரை தோண்டப்பட்டதாகவும், குழந்தை சிக்கியுள்ள 150 அடி ஆழம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆழத்தை அடைந்த பிறகு, ஆழ்துளைக் கிணற்றில் உள்ள சிறுவனை நெருங்க கிடைமட்டமாக ஒரு உறை போடப்படும் என்று கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சம்பவ இடத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.