இடைத்தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 53 மையங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 8-ஆம் தேதி வேட்பாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஸ்ரீகாந்த், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்று, அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள், அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு தேவையான அடிப்படை வசதி மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து, அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜ், மாநகராட்சி பொறியாளா் விஜயகுமாா், செயற்பொறியாளா் பிச்சமுத்து மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.