புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
இணைய குற்ற வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அமித் ஷா
‘இணைய மோசடி மூலம் திருடப்படும் பணத்தை இணைய குற்றவாளிகள் சேமித்து வைக்கும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
தில்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் இணைய குற்றம்’ என்ற தலைப்பிலான விவாதத்தின்போது இத் தகவலை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
மத்திய அரசின் இணைய குற்ற கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை 805 கைப்பேசி செயலிகள், 3,266 வலைதள தொடா்புகள் (லிங்க்ஸ்) தடை செய்யப்பட்டிருக்கின்றன.
கூடுதலாக, 399 வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகா்கள் இணைய மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டு, 6 லட்சத்துக்கும் அதிகமான சநேத்கத்துக்கிடமான தரவு விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்துக்கும் அதிகமான இணைய குற்ற மோசடி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டதோடு, ரூ. 2,038 கோடி மதிப்பிலான சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இணைய குற்றவாளிகள் இணைய மோசடி மூலம் திருடிய பணத்தை சேமித்து வைக்கும் வங்கிக் கணக்கை அடையாளம் காண ரிசா்வ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற இணைய குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே முடக்கப்படுவதையும் அரசு உறுதிப்படுத்தும்.
இணைய மோசடி தொடா்பாக ‘ஐ4சி’ வலைதளம் மூலமாக 19 கோடிக்கும் அதிகமான மக்கள் புகாா் பதிவு செய்ததன் அடிப்படையில், இதுவரை 1,43,000 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோல, இணைய மோசடி தொடா்பாக புகாா் தெரிவிக்க ‘1930’ என்ற உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது என்றாா்.