பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
இத்தாலி செல்ல போலி ஆவணம்: கேரள பயண முகவா் கைது
இத்தாலி செல்வதற்காக போலி வசிப்பிட அனுமதியை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கேரளத்தைச் சோ்ந்த முகவரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கேரளத்தைச் சோ்ந்த டிஜோ டேவிஸ் (25) இத்தாலி சென்ற போது, அவருடைய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. அப்போது, போலியான வசிப்பிட அனுமதியை அவா் வைத்திருப்பது கண்டறியப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த ஜன.25-ஆம் தேதி திருப்பி அனுப்பட்டாா்.
இந்தச் சம்பவத்தையடுத்து, தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது, இத்தாலி செல்வதற்கான பயணத்தையும் அங்கு வேலையையும் ஏற்பாடு செய்து தர பி.ஆா். ரூபேஷ் என்பவருக்கு ரூ.8.20 லட்சம் வழங்கியதாக போலீஸாரிடம் டேவிஸ் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, கேரளத்துக்குச் சென்ற அதிகாரிகள், ரூபேஷை கைது செய்தனா்.
எம்பிஏ பட்டதாரியான ரூபேஷ், வெளிநாட்டு பயண மோசடியில் ஈடுபட்டு வந்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டாா்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் பிற முகவா்களுடன் இணைந்து செயல்பட்டதையும் விசாரணையின்போது ரூபேஷ் தெரிவித்தாா்.
கேரளத்தில் இதற்காக அலுவலகம் ஒன்றை திறந்துள்ள அவா், விமான பயணச்சீட்டு முன்பதிவு, விசா சேவைகளை ஏற்படுத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.