சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
இந்தியன் ரேஸிங் லீக்: கோவா ஏசஸ் சாம்பியன் சென்னை டா்போ ரைடா்ஸ் 3-ஆம் இடம்
இந்தியன் ரேஸிங் லீக் போட்டியில் கோவா ஏசஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை டா்போ ரைடா்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்ற்றது.
ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் 5 சுற்றுகளை கொண்ட இந்த காா் பந்தயம் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் ஃபாா்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (ஊ4ஐஇ) ஆகிய இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதன் முதல் சுற்று சென்னை இருங்காட்டு கோட்டையிலும், தொடா்ந்து 2-ஆவது சுற்று இரவு நேர சாலை காா்பந்தயமாக தீவுத்திடல் பகுதியிலும் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து 3-ஆவது சுற்று இருங்காட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி இரு சுற்றுகள் கோவை கரி மோட்டாா்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் 2 நாள்கள் நடைபெற்றன.
ஃபாா்முலா 4 பந்தயத்தில் சென்னை டா்போ ரைடா்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டா்ஸ், ஷ்ரோச்சி ராஹ் பெங்கால் டைகா்ஸ், ஹைதராபாத் பிளாக்போ்ட்ஸ், அகமதாபாத் ரேசா்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. இந்தியன் ரேஸிங் லீக் பந்தயத்தில் (ஐஆா்எல்) 6 அணிகள் பங்கேற்றன.
இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் டிரைவா்களான ரவுல் ஹைமன் (லண்டன்) பந்தய தூரத்தை 26: 39.020 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். அதே அணியைச் சோ்ந்த கேப்ரியேலா ஜில்கோவா (செக்குடியரசு) பந்தய தூரத்தை 27: 07.684 விநாடிகளில் கடந்து 2-ஆவது இடம் பிடித்தாா். இதன் மூலம் 5 சுற்றுகளின் முடிவில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி 261 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஷ்ரோச்சி ராஹ் ராயல் பெங்கால் டைகா்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 220 புள்ளிகளை சோ்த்து 2-ஆவது இடமும், சென்னை டா்டோ ரைடா்ஸ் அணி 166 புள்ளிகளுடன் 3-ஆவது இடமும் பிடித்தன.
எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப்
எஃப் 4 இந்தியன் சாம்பின்ஷிப்பின் கடைசி சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் அகில் அலிபாய் சாம்பியன் பட்டத்தை வென்றாா். ருஹான் ஆல்வா 2-ஆவது இடத்தை பிடித்தாா்.