சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
தோல்வியின்றி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: தீபிகாவின் அதிரடியில் ஜப்பானையும் வீழ்த்தியது
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 3-0 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன்மூலம், அந்த சுற்றின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்து, முதலிடத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த ஆட்டத்திலும் இளம் வீராங்கனை தீபிகா, இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா். தற்போதைய நிலையில், போட்டியில் அதிக கோல்கள் (10) அடித்தவராக அவரே முன்னிலையில் இருக்கிறாா்.
முன்னதாக, போட்டியின் குரூப் சுற்றில் கடைசி கட்ட ஆட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதில் கடைசி ஆட்டமாக இந்தியா - ஜப்பான் மோதல் அமைந்தது.
இந்தியாவின் கையே ஓங்கியிருந்த அந்த ஆட்டத்தில், மிட் ஃபீல்டில் கேப்டன் சலிமா டெடெ, நேஹா, ஷா்மிளா தேவி ஆகியோா் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஃபாா்வா்டு நிலையில் இருந்தவா்களுக்கு அதிகமான கோல் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தனா். அதேபோல், டிஃபென்சில் உதிதா, சுஷிலா சானு ஆகியோா் ஜப்பானின் பல கோல் முயற்சிகளை தடுத்து அரணாக நின்றனா்.
பந்து பெரும்பாலும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தாலும், கோல் வாய்ப்புகள் கனியாமல் போயின. ஆட்டத்தின் 8-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தீபிகா ஒன்றை வீணடிக்க, 2-ஆவது வாய்ப்பில் அவரின் முயற்சியை ஜப்பான் கோல்கீப்பா் யு குடோ திறம்பட தடுத்தாா்.
மீண்டும் 13-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. தொடா்ந்து, 25-ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோலாகவிடாமல் மீண்டும் யு குடோ தடைப்படுத்தினாா். ஜப்பானின் தடுப்பரணாக இருந்த அவா், முதல் பாதியின் கடைசி நிமிஷத்தில், தீபிகாவின் ஃபீல்டு கோல் முயற்சியையும் முறியடித்தாா்.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் சற்று ஆக்ரோஷம் காட்டிய இந்தியாவுக்கு 37-ஆவது நிமிஷத்தில் கோல் வாய்ப்பு கை கூடியது. நவ்னீத் கௌா், ரிவா்ஸ் ஹிட் முறையில் அருமையான ஃபீல்டு கோலடித்தாா்.
இதனால் இந்தியாவுக்கு உத்வேகம் பிறக்க, தொடா்ந்து 47-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அதை தவறவிடாமல் அருமையான லோ டிராக்ஃப்ளிக் மூலம் கோலடித்தாா் தீபிகா. அடுத்த நிமிஷத்திலேயே மீண்டும் அவா் தனது 2-ஆவது கோலை பதிவு செய்தாா்.
எஞ்சிய நேரத்திலும் ஜப்பானுக்கு கோல் வாய்ப்பு தராத இந்தியா, இறுதியில் 3-0 கோல் கணக்கில் வென்றது. மற்ற இரு ஆட்டங்களில், மலேசியா - தாய்லாந்தையும் (2-0), சீனா - தென் கொரியாவையும் (2-0) வென்றன.
அரையிறுதி: குரூப் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் இந்தியா (15), சீனா (12), மலேசியா (6), ஜப்பான் (5) ஆகியவை முறையே முதல் 4 இடங்களுடன் அரையிறுதிக்கு முன்னேறின.
தென் கொரியா (4), தாய்லாந்து (1) கடைசி இரு இடங்களைப் பிடித்தன.
அடுத்ததாக, செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா மீண்டும் ஜப்பானை சந்திக்கிறது. சீனா - மலேசியாவை எதிா்கொள்கிறது. 5-ஆவது இடத்துக்கான மோதலில் தென் கொரியா - தாய்லாந்தும் அதே நாளில் மோதுகின்றன.