``இந்தியாவிலேயே இதை முதலில் செய்தது சமந்தா மட்டும்தான்..'' - புகழும் இயக்குநர்
ஓ! பேபி படத்தை இயக்கிய இயக்குநர் நந்தினி தேவியுடம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்கிறார் சமந்தா.
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவில் 'சினிமாவில் பெண்கள்' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே உள்ள சம்பள வித்தியாசம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் நந்தினி தேவி, "நான் என்னுடைய அடுத்த படத்தில் சமந்தாவுடன் கைக்கோர்க்கிறேன்.

த்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான பங்காரம் படத்தில் ஆண், பெண் என்று பாராமல் அனைவருக்கும் சமமான சம்பளம் வழங்கப்பட்டது என்று சமந்தா என்னிடம் கூறினார். இந்தியாவிலேயே ஆண், பெண் வித்தியாசம் இல்லாத சமமான சம்பளம் வழங்கிய ஒரே தயாரிப்பாளர் சமந்தாவாகத் தான் இருப்பார்.
தங்களது படத்திற்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு தங்களை நிரூபிக்க வேண்டும். ஒரு ஆண் இயக்குநர் நான்கு ஆண்டுகளில் சாதிப்பதை ஒரு பெண் இயக்குநர் சாதிக்க எட்டு ஆண்டுகள் பிடிக்கும். இதில் சம்பள வித்தியாசமும் அடங்கும்" என்று பேசியுள்ளார்.