இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 6 பதக்கங்கள்
தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 2-ஆம் நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தமிழக வீரா், வீராங்கனைகளின் பங்களிப்பும் அடக்கம்.
கலப்பு ரிலேவில் தங்கம்: 4*400 மீட்டா் கலப்பு ரிலேவில் இந்தியாவின் ரூபல் சௌதரி, சந்தோஷ் குமாா், விஷால் டி.கே., சுபா வெங்கடேசன் ஆகியோா் அடங்கிய அணி 3 நிமிஷம் 18.12 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது. இதில் சந்தோஷ், விஷால், சுபா ஆகியோா் தமிழா்களாவா்.
இப்பிரிவில், சீன அணி வெள்ளியும் (3:20.52’), இலங்கை அணி வெண்கலமும் (3:21.95’) வென்றன.
டெக்கத்லான்: ஆடவருக்கான டெக்கத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். மொத்தம் 10 பிரிவுகள் அடங்கிய இந்த விளையாட்டில் அவரின் மொத்த ஸ்கோா் 7,618 ஆகும். சீனாவின் ஃபெய் ஜியாங் தங்கமும் (7,634), ஜப்பானின் கெய்சுகே ஒகுடா (7,602) வெண்கலமும் வென்றனா். பிறப்பால் தமிழரான தேஜஸ்வின் சங்கா், தில்லியை சோ்ந்தவராவாா்.
மும்முறை தாண்டுதல்: ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில், தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் தனது சிறந்த முயற்சியாக 16.90 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். சீனாவின் ஜு யாமிங் 17.06 மீட்டருடன் தங்கமும், தென் கொரியாவின் கியுமின் யு 16.82 மீட்டருடன் வெண்கலமும் பெற்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அப்துல்லா அபூபக்கா் 16.72 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.
400 மீட்டா்: மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் ரூபல் சௌதரி 52.68 விநாடிகளில் 2-ஆவதாக இலக்கை அடைந்து வெள்ளி பெற்றாா். ஜப்பானின் நனாகோ மட்சுமோடோ 52.17 விநாடிகளில் வந்து தங்கமும், உஸ்பெகிஸ்தானின் ஜோன்பிபி ஹுக்மோவா 52.79 விநாடிகளில் வந்து வெண்கலமும் பெற்றனா்.
இப்பிரிவில் களம் கண்ட தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், 53 விநாடிகளில் இலக்கை அடைந்து 4-ஆம் இடம் பிடித்தாா்.
1,500 மீட்டா்: மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா 4 நிமிஷம் 10.83 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். சீனாவின் லி சுன்ஹுய் தங்கமும் (4:10.58’), ஜப்பானின் டோமோகா கிமுரா வெண்கலமும் (4:11.56’) வென்றனா். இப்பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்தியரான லில்லி தாஸ் 4 நிமிஷம் 13.81 விநாடிகளில் 4-ஆவதாக வந்தாா்.
இதிலேயே ஆடவா் பிரிவில் யூனுஸ் ஷா 3 நிமிஷம் 43.03 விநாடிகளில் 3-ஆவதாக வந்து வெண்கலம் வென்றாா். ஜப்பானின் கஸுடோ லிஸாவா தங்கமும் (3:42.56’), தென் கொரியாவின் ஜேயுங் லீ வெள்ளியும் (3:42.79’) பெற்றனா்.
ஏமாற்றம்: கலப்பு ரிலேவில் தங்கம் வென்ற அணியில் அங்கம் வகித்த விஷால் கே.டி., ஆடவா் 400 மீட்டரில் 45.57 விநாடிகளில் வந்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டாா்.
கத்தாரின் அமா் இஸ்மாயில் (45.33’), ஜப்பானின் கென்டாரோ சாடோ (45.50’), இலங்கையின் கலிங்கா குமாரகே (45.55’) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.
3-ஆம் இடம்: போட்டியின் 2-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தில் இருந்தது. சீனா முதலிடத்திலும் (11/4/0 - 15), ஜப்பான் 2-ஆம் இடத்திலும் (3/5/6 - 14) உள்ளன.