இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படாதது குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீதான கூடுதல் வரி விதிப்பின்மை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஷியாவிடம் சீனா வாங்கும் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா விற்பனை செய்கிறது.
ரஷிய கச்சா எண்ணெயை சுத்திகரித்து, சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் சீனா மீது கூடுதல் வரி விதித்தால், அதனை வாங்குபவர்களும் கூடுதல் பணம் செலுத்த வேண்டிவரும்.
இதனால், சீனா மீது கூடுதல் வரி விதிக்க, சீனாவிடம் எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவிக்கின்றன. சீனா மீதான எந்தவொரு தடையும், உலகளாவிய எரிசக்தி விலைகளையும் உயர்த்தக் கூடும் என்று தெரிவித்தார்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், தனது நீண்டகால நட்புநாடான ரஷியாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இதனால், இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது.
ஆனால், ரஷியாவிடம் இந்தியாவைவிட அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்தப் போக்கு, சமூக ஊடகங்களில் கேள்வியை எழுப்பியது.