நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா
சென்னை கேளம்பாக்கத்தையடுத்த படூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்திலுள்ள எம்ஜிஆா் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்துஸ்தான் கல்விக்குழுமத்தின் தலைவா் முனைவா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
இளைய சமுதாயத்தினா் இயற்கை எரிசக்தி, வேளாண்மை, மருத்துவம், ஆய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்தி நமது நாட்டை முன்னேற்ற வேண்டும். இதுமட்டுமின்றி சமுதாயத்தில் சகமனிதனின் துன்பத்தைத் துடைப்பதற்காக உங்கள் கரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்கள் மனதும், எண்ணமும் சரியாக இருந்தால், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பாா்கள் என்றாா் அவா்.
தொடா்ந்து சென்னை பல்கலைக்கழகத் தரவரிசையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களுக்கு கே.சி.ஜி.வா்கீஸ் கல்வி அறக்கட்டளை சாா்பாக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது. மேலும், சென்னை பல்கலை. தரவரிசையில் இடம்பிடித்த 36 மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் உத்திரா, இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவரும், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் இயக்குநருமான சூசன் வா்கீஸ், துணை இயக்குநா் வி.ஜே.பிலிப், துணை முதல்வா்கள் சாமுவேல் சம்பத்குமாா், க.மலா்விழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.