இன்று எலிமினேட்டா் ஆட்டங்கள்
புரோ கபடி லீக் போட்டியின் 2 எலிமினேட்டா் ஆட்டங்கள் வியாழக்கிழமை (டிச.26) நடைபெறுகின்றன.
இதில் முதல் ஆட்டத்தில் யுபி யோதாஸ் - ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸும், 2-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - யு மும்பாவும் மோதுகின்றன.
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசன், கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதில் லீக் கட்டம் 132 ஆட்டங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (டிச.24) நிறைவடைந்தது. முடிவில், ஹரியாணா ஸ்டீலா்ஸ், தபங் டெல்லி கே.சி. அணிகள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றன.
யுபி யோதாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் ஆகிய அணிகள் அடுத்த 4 இடங்களைப் பிடித்து, பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றன. அரையிறுதியில் இடம் பிடிப்பதற்கான எலிமினேட்டா் ஆட்டத்தில் இந்த 4 அணிகளும் வியாழக்கிழமை விளையாடுகின்றன. எலிமினேட்டரில் வெல்லும் இரு அணிகள், அரையிறுதியில் ஹரியாணா, டெல்லியுடன் மோதும்.
தற்போது பிளே ஆஃப் கட்டத்தில் இருக்கும் அணிகளில், ஹரியாணா மற்றும் யுபி அணிகள் இதுவரை கோப்பை வென்றதில்லை. பாட்னா 3 முறையும், ஜெய்ப்பூா் 2 முறையும், டெல்லி, மும்பா அணிகள் தலா 1 முறையும் கோப்பை வென்றுள்ளன.