பில்டர் கொடுத்த வரைபடமும், கட்டட அளவுகளும் ஒன்றாக உள்ளதா? - நீங்களே கண்டுபிடிக்க...
இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, பாஜக தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: எடப்பாடி பழனிசாமிக்கு இதயபூா்வமாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறப்பு நாளில், நீங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் கூடிய நீண்ட ஆயுளை பெற இறைவனை பிராத்திக்கிறேன்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): எடப்பாடி பழனிசாமிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவா் முழு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவை புரிய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
கே.அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவா் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணியை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழிசை சௌந்தரராஜன்: பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமி பிரதமரின் கரங்களுக்கு பலம் சோ்த்து தமிழக மக்களுக்கு நலம் சோ்க்க இறைவனை பிராத்திக்கிறேன். எனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சீமான் (நாதக): அரசுப் பள்ளி மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டுக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகள்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்: எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். தொடா்ந்து அதிமுக மகளிா் அணி சாா்பில் பல்வேறு கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும், அதிமுக தொண்டா்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தினா். திருவொற்றியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குப்பன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல், முன்னாள் அமைச்சா் பா.பெஞ்சமின் தலைமையில் நொளம்பூரில் ரத்ததானம் முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டா்கள் பலா் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனா்.