மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்; கண்டிக்கும் அர...
இபிஎஸ்ஸுடன் கருத்து வேறுபாடு? - "நான் மனம் திறந்து பேசப்போகிறேன்" - செங்கோட்டையன் சொல்வது என்ன?
கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதில், அதிமுக-வின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். அதேபோல தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இதனால் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதல் வெளிப்படையாகத் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் டெல்லிக்குச் சென்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது, சட்டமன்ற கூட்டத்தொடரில் தனியாகச் செல்வது எனத் தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் கருத்துமோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேட்டுப்பாளையத்தில் நடந்த அதிமுக பிரசாரப் பயணத்திற்குக் கூட செங்கோட்டையன் வராததால், அவர் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரசாரங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுகிறார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2) ஈரோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அதனை உறுதியும் செய்திருக்கிறார்.
"செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று கோபிசெட்டிபாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப்போகிறேன். அப்போது நான் என்ன சொல்லப்போகிறேன் என்று நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்.
இன்று செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.