ஆப்கன் நிலநடுக்கம்: 1,100-ஐ கடந்த உயிர் பலிகள்! மீட்புப் பணிகள் தீவிரம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக.31 நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின், நிலப்பரப்புக்கு 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குனான் மாகாணத்தில் சுமார் 8,000-க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் பலியானோரது எண்ணிக்கை 1,124 ஆக அதிகரித்ததுடன், 3,521 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஆப்கன் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
இத்துடன், இடிபாடுகளினுள் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில், நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 1,000 குடும்பங்கள் தங்குவதற்கான கூடாரங்கள் உள்பட ஏராளமான நிவாரணப் பொருள்கள் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!