வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
வீடுகளை சூழ்ந்திருக்கும் வெள்ள நீரை வீணாக்காமல், வீட்டில் இருக்கும் கண்டெய்னர்களில் பிடித்து வைத்துக் கொண்டால் பிறகு தேவைக்கு பயன்படுத்தலாம் என்றும், வெள்ளம் குறைந்துவிடும் என்றும் யோசனை கூறியிருப்பது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மழை, வெள்ளத்தைக் காரணம் காட்டி சாலை மறியலில் ஈடுபடாமல், வீட்டில் இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சேமித்து வைத்துக் கொண்டால், பிறகு பயன்படும் என்று ஆசிஃப் கூறியுள்ளார்.
மக்கள் வெள்ள நீரை எங்காவது வீட்டில் உள்ள ஏதாவது கண்டெய்னர்களில் பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீர் அந்த தண்ணீர், இவை எல்லாம் கடவுளின் வரம். இவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தானே பெரிய அணைகள் கட்டப்படுகின்றன. ஆனால், அவற்றை கட்டி முடிக்க 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையே மழை, வெள்ளம் புரட்டிப்போட்டிருக்கும் நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை, பாகிஸ்தானில், இந்த மழை, வெள்ளத்துக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். 2,200 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 7,00,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.