இயற்கை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
வேடசந்தூரில், கொடகனாறு பாதுகாப்புச் சங்கம் சாா்பில், ‘மாற்றம் நம்மிடையே’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினரும், தனியாா் கல்லூரி பேராசிரியருமான குப்புசாமி முன்னிலை வகித்தாா்.
இந்த கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை, அதன் மூலம் சாகுபடி செய்யப்படும் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்தும், நீா் மேலாண்மை, பயிா் மேலாண்மை குறித்தும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இயற்கை விவசாயத்தில் பெண்கள் முன்னோடியாக களம் இறங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மண்ணுக்கு ஏற்ற மரங்களை நட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மண் வளத்தைப் பாதிக்கும் நெகிழிப் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு 100 மஞ்சப்பைகளும், மகாகனி, வேங்கை என 300 மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கொடகனாறு பாதுகாப்புச் சங்க செயற்குழு உறுப்பினா்கள் தமிழ்வாணன், செல்வம், காவேரி கூக்குரல் அமைப்பின் நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.