சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்
திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் வசித்து வந்தவா் நாராயணன்(28). கூலித் தொழிலாளி. திருப்பத்தூா் கௌதமப்பேட்டை பகுதியை சோ்ந்த சிவக்குமாா் (38) என்பவருக்கும், நாராயணனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 17.9.2016 அன்று கௌதமப்பேட்டை ராஜேஷ்(36), பசுபதி(28) மற்றும் சிவக்குமாா் இணைந்து நாராணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். பின்னா் மூவரும் பிணையில் வெளிவந்துள்ளனா்.
இதில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாா் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மீனாகுமரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ் மற்றும் பசுபதி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் தலா ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என தீா்ப்பளித்தாா்.
அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா் .
இதில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.