இருசக்கர வாகனம் திருடியவா் கைது
மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அண்ணாமலை நகரைச் சோ்ந்த ராஜன் மகன் வருனேஸ்வரன்(22). இவா், ஜன.8-ஆம் தேதி தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு தூங்கசென்றவா் மறுநாள் பாா்த்தபோது மா்மநபா்கள் வாகனத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்ததையடுத்து மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, காவல் சாா்பு ஆய்வாளா் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மன்னாா்குடியில் மதுக்கூா் சாலை ஏழாம் எண் வாய்க்கால் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சோ்ந்த முருகன் மகன் கண்ணனை (21) நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து மேல்விசாரணை செய்ததில், வருனேஸ்வரனின் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து கண்ணனை கைது செய்த போலீஸாா் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.