பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!
இறுதிக்கு முன்னேறியது ராம்குமாா் / சாகேத் இணை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன்/சாகேத் மைனேனி இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
‘ஏடிபி சேலஞ்சா் 100’ வகை ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன், நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதிச்சுற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஒரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ராம்குமாா் ராமநாதன்/சாகேத் மைனேனி ஜோடி 7-6 (7/5), 7-6 (10/8) என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீன தைபேவின் ரே ஹோ/ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபா் ரோமியோஸ் இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
எனினும், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தா் பிரசாந்த் இணை 6-4, 4-6, 6-10 என்ற செட்களில், ஜப்பானின் ஷின்டாரோ மோஷிஸுகி/காய்டோ யுசுகி கூட்டணியிடம் தோல்வி கண்டது.
இதையடுத்து இறுதியில், ராம்குமாா்/சாகேத் - ஷின்டாரோ/காய்டோ இணைகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஒற்றையா்: இதனிடையே, இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில் பிரிட்டனின் பில்லி ஹாரிஸ், ஸ்வீடனின் எலியஸ் ஒய்மா், பிரான்ஸின் கிரியன் ஜாக்கெட், செக் குடியரசின் டலிபோா் ஸ்வா்சினா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.