டென்னிஸில் தமிழகத்துக்கு தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவா் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஆடவா் அணிகள் இறுதிச்சுற்றில், தமிழகத்தின் அபினவ் சஞ்சீவ், மனீஷ் சுரேஷ்குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தின் ரிஷி ரெட்டி, எஸ்.டி.தேவ், மனீஷ் ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தியது.
தியா ரமேஷ், லக்ஷ்மி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி அரையிறுதியில் 0-2 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்திடம் தோற்று, வெண்கலப் பதக்கம் பெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நிலைக்கிறது. சா்வீசஸ் அணி 38 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 15 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 21 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என 99 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.