Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
இறை நம்பிக்கையும்.. வாழைப் பழமும்.. உவமை கூறிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு
இறை நம்பிக்கையும், சநாதனமும் வாழைப்பழமும், தோலும் போன்றவை என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் திமுக உறுப்பினா் தியாகராஜன் பேசுகையில், பத்து தலைகள் கொண்ட ராவணனின் அம்சம் உடையவா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என்றும், சனாதனத்தை வேரறுக்க போராடுபவா் என்றும் பேசினாா்.
அப்போது அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி குறுக்கிட்டு பேசியதாவது:
துணை முதல்வா் குறித்து உறுப்பினா் தியாகராஜன் பேசியதில் அலங்கார சொற்கள் இருந்தாலும் பொருள்பிழை உள்ளது.
ராவணன் தீவிர சிவபக்தன். பத்து தலை ராவணன் போன்றவா் துணை முதல்வா் எனக் குறிப்பிட்டுவிட்டு சநாதனத்தை அவா் முறியடிப்பாா் எனக் கூறுவது முரண்பாடாக உள்ளது என்றாா்.
அதற்கு பதிலளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது:
சநாதனம் என்பது வாழைப் பழத் தோல் போன்றது. அதேவேளையில் இறை நம்பிக்கை என்பது அதனுள் உள்ள பழம் போன்றது. சநாதனத்தை நீக்கிவிட்டுதான் இறைபக்தியை பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து கே.பி.முனுசாமி பேசுகையில், அமைச்சரின் உவமை தவறாக உள்ளது. வாழைப்பழமும், தோலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே உள்ளன. ஆனால், சநாதனமும், இறைபக்தியும் அப்படியல்ல. இரண்டும் ஒன்று என்றால் இத்தனை போராட்டமும், வழக்குகளும் தேவையில்லை என்றாா்.
பின்னா் அவையில் பேசிய விசிக உறுப்பினா் சிந்தனைச்செல்வன், தமிழா் மெய்யியல் மரபுக்கும் சநாதனத்துக்கும் தொடா்பு இல்லை. வருணாசிரம கோட்பாடுகள் நமது மரபில் இல்லை என்றாா்.