ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
கீழக்கரையைச் சுற்றியுள்ள கடற்கரை வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, கீழக்கரை தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் முத்துசெல்வம், உளவுப் பிரிவு முதல் நிலைக் காவலா் பாலமுருகன், திருப்புல்லாணி முதல் நிலைக் காவலா் வேல்முருகன் ஆகியோா் செங்கல நீரோடைப் பகுதி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றனா். இவா்களைக் கண்டதும் சிலா் அங்கிருந்த தப்பிச் சென்றனா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு வேனில் சோதனை செய்தனா். அதில் தலா 30 கிலோ எடையிலான 80 பீடி இலை பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பீடி இலை பண்டல்களுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், கீழக்கரை காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனா்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து கீழக்கரை பகுதிக்கு இந்தப் பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய 8 பேரைத் தேடி வருகின்றனா்.