Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிக...
இளம் வயதில் போதைப்பழக்கம்; பிற்கால தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? - காமத்துக்கு மரியாதை 253
மது, போதைப்பொருள், செல்போனில் ஆபாசப்படங்கள் என இளைய தலைமுறையினர் மீது எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இவற்றைத் தடுக்கும் ஒரே தடுப்பூசி செக்ஸ் கல்விதான் என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம், கல்லூரி படிக்கையிலேயே போதைப்பொருள் பழக்கம் வந்துவிட்டால், அவர்களுடைய பிற்கால தாம்பத்திய வாழ்க்கை எப்படியிருக்கும் எனக் கேட்டோம்.

''கண்டிப்பாக பாதிப்படையும். ஆல்கஹால் மட்டுமல்ல, எந்தப் போதைப்பொருளையும் ஆரம்பத்தில் குறைவாகத்தான் உட்கொள்வார்கள். அப்படிக் குறைவாக எடுத்துக்கொண்டாலும்கூட, அதிகமான கிளர்ச்சியை அனுபவிப்பார்கள். இயல்பில் குறைவாக பேசுகிற நபர் மது அருந்திவிட்டால், அதிகமாகப் பேசுவார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அவர் நினைத்ததை எல்லாம் பேசுவார். நினைத்ததை எல்லாம் செய்வார். இதைப் பேசலாமா, கூடாதா என்று அந்த நேரத்தில் அவரால் யோசிக்கமுடியாது. அந்தக் கட்டுப்பாடு அவர் வசமிருக்காது. மூளையில் 'inhibition center' மெதுவாகி விடும். அதனால்தான், மது மற்றும் போதைப்பொருள்களை எடுத்திருக்கும்போது வாகனம் ஓட்டக்கூடாது என்கிறார்கள். ஆபத்தை உணர்ந்து அவர்கள் பிரேக் போடுவதற்குள் எல்லாமே முடிந்துபோயிருக்கும்.
இதுதான் செக்ஸிலும் நிகழும். தவறான உறவில் ஈடுபடலாம். பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்யலாம். பால்வினை நோய்களை வாங்கி தங்களுக்கும் கெடுதல் செய்துகொண்டு, அடுத்தவர்களுக்கும் கெடுதல் செய்துவிடுவார்கள். தவிர, போதைப்பொருள் பழக்கம் தொடர்ந்து இருந்தாலோ அல்லது ஓவர் டோஸ் எடுத்தாலோ அவர்களால் செக்ஸ் செய்யவே முடியாது. தொடர்ந்து மது அருந்துபவர்களாலும், ஒருகட்டத்துக்கு மேல் செக்ஸ் செய்ய முடியாது. உறவில் ஈடுபடும்போதே ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை குறைந்துபோய்விடும். தூக்கம் வந்துவிடும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும் ஆண்மை குறைபாடு வரும். மூளையில் சில பாதிப்புகள் வரும். தினசரி வேலைகள் செய்வதிலும் பிரச்னைகள் ஏற்படும்.
இவர்களால் போதை இல்லாமல் வாழவும் முடியாது. இதில் மதுவைவிட போதைப்பொருள்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். பல்வேறு தொற்றுநோய்களும் வந்துவிடும். மொத்தத்தில் ஆயுளைச் சுருக்கி விடும் போதைப்பழக்கம். அற்புதமான வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் சென்றுவிடுவார்கள்'' என்கிறார் வருத்தமுடன் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...