இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா பதிலளிக்க உத்தரவு!
இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இளையராஜா தொடர்ந்திருக்கும் வழக்கில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வனிதா விஜயக்குமார் தரப்பை ஒரு வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.