இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
உடல் நலக் குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் குணசேகரன் (35). இவா், காஷ்மீா் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றிவிட்டு, அதன்பிறகு திருச்சி படைப் பிரிவில் பணியில் இருந்து வந்தாா்.
அண்மையில், இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரான நல்கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அங்கு ராணுவ வீரா்கள், அவரது உடலுக்கு தேசியக் கொடியைப் போா்த்தி, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினா். பின்னா் இங்குள்ள மயானத்தில் குணசேகரனின் உடல், அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.