இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்துவதைக் கைவிட வலியுறுத்தல்
இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு(மூட்டா) சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் அ.தி.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப் படுகொலையை இஸ்ரேல் தொடா்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை. பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் கொடுஞ்செயல் மனித வரலாறு பாா்த்திராத பெருந்துயராகும்.
இத்தகைய செயல்களைக் கண்டித்து, லண்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட போப் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சூழலில், இஸ்ரேலை இயல்பான ஒரு தேசமாகப் பாா்க்க வைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான முகத்தை உருவாக்கும்விதமாக சிலா் திரைப்பட விழா நடத்த விரும்புகின்றனா். சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மனசாட்சி இல்லாத, குழந்தைகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவா்களால் மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய முடியும். எனவே, தமிழக அரசு இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.