திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025-2026 ஆம் நிதியாண்டில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழகத்தைச் சோ்ந்த 25 வயதுக்கும் மேற்பட்டவராக இருப்பதுடன் பிறப்பிடச் சான்று, கல்விச்சான்று, முன்னுரிமை பெற வட்டாட்சியரிடமிருந்து கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானச் சான்று புதிதாகப்பெற்று இணைக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயன்பெற பெண்கள் மட்டும் வெள்ளைத்தாளில், பெயா், முழு முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, உரிய சான்று நகல்களுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலம் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக இணைப்புக் கட்டடம், திருவாரூா் 610 004 என்ற முகவரிக்கு அனுப்பி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.