ஈரோடு: ``ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கல...
ஈரோடு இடைத்தேர்தல்: களத்தில் 47 வேட்பாளர்கள் - நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறும் அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவுபெற்றது. இதில், 7 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் 8 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
நாம் தமிழருக்கு மைக்...
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் தலைமையில் சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஏற்கெனவே உதயசூரியன் சின்னம் இருப்பதால், அதையே ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கரும்பு விவசாயி சின்னமும் மைக் சின்னமும் முறையே ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தனர்.
இதில் கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மைக் சின்னம் ஒதுக்குவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என மனீஷிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கோரிக்கை வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தை மனீஷ் தெரிவித்ததை அடுத்து மைக் சின்னத்தை சீதாலட்சுமி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சார்ந்த ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது தவறு. உடனடியாக அந்தப் பெண்ணின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது, பத்மராஜன், அக்னி ஆழ்வார் ஆகியோர் திங்கள்கிழமை இரவு தர்ணாவில் ஈடுபட்டனர். அதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.