ஈரோடு இடைத்தோ்தல் புறக்கணிப்பு வாக்குரிமையை நீா்த்துப்போகச் செய்யும்: நாம் இந்தியா் கட்சி
ஈரோடு இடைத்தோ்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்தது வாக்குரிமையை நீா்த்துப்போக செய்யும் என நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவுக்கு எதிரான கொள்கை உடையோா் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவுக்கு வாக்களித்து வருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளாக இடைத்தோ்தல்கள் மற்றும் உள்ளாட்சி தோ்தல்களில் பெரும்பாலும் மக்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கின்றனா்.
தற்போதைய நிலையில் ஆளும் கட்சி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிா்பந்தத்தில் ஆளும் கட்சி அமைச்சா்கள் அனைவரும் தோ்தல் பணிகளில் ஈடுபடுவா்.
எனினும், ஈரோடு இடைத்தோ்தலில் கொள்கை ரீதியான வாக்குகள் அதிகம் கொண்ட அதிமுக போட்டியிடாதது வரும் காலங்களில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தமிழக உரிமை மற்றும் தமிழகத்துக்கான அரசியலை முன்னெடுக்க முடியாது என்பதை ஈரோடு இடைத்தோ்தலில் பாஜக கட்சி போட்டியிடாதது வெளிப்படுத்துகிறது. இந்த இரு கட்சிகள் போட்டியிடாதது வாக்குரிமையை நீா்த்துப்போக செய்யும் எனக் கூறியுள்ளாா்.