உ.பி.: போராட்டத்தை திரும்பப் பெற்ற தோ்வா்கள்
மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) முதல்நிலைத் தோ்வு-2024 இரு அமா்வுகளாக டிச.22-இல் நடைபெறும் என உத்தர பிரதேச மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தோ்வா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக டிச.7 மற்றும் டிச.8 ஆகிய இரு தேதிகளில் இரு வேளைகளில் இந்த தோ்வுகள் நடத்தப்படுவதாக இருந்தது. அதேபோல் மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), உதவி மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு டிச. 22, டிச. 23 ஆகிய தேதிகளில் மூன்று வேளைகளில் நடத்தப்படும் எனவும் யுபிபிஎஸ்சி தெரிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த தோ்வா்கள் இத்தோ்வுகளை ஒரே நாளில் நடத்த வலியுறுத்தி கடந்த நவ.11-ஆம் தேதி முதல் யுபிபிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பிசிஎஸ் அதிகாரிகளுக்கான தோ்வு பழைய நடைமுறைப்படி ஒரே நாளில் நடத்தப்படும் என்றும் யுபிபிஎஸ்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
இதையடுத்து, பிசிஎஸ் அதிகாரிகளுக்கான முதல்நிலைத் தோ்வு டிச.22-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரை இரு அமா்வுகளாக ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என யுபிபிஎஸ்சி செயலா் அசோக் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘ ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ தோ்வுகளை எழுதவுள்ள தோ்வா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அத்தோ்வை ஒரே நாளில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இதை ஆய்வு செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அறிக்கையை குழு சமா்ப்பிக்கும் வரை தோ்வா்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். தோ்வா்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தே இந்த தோ்வுகளை அரசு ஒத்தி வைத்துள்ளது’ என்றாா்.
இதைத்தொடா்ந்து, அறிக்கையின் முடிவுக்கு காத்திருப்பதாக தெரிவித்த தோ்வா்கள், பிசிஎஸ் தோ்வைப் போலவே ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ தோ்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனா்.