Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டம் தொடங்கப்பட்டு 30 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் 3,561 முகாம்கள் நடந்துள்ளன.
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும்‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இந்தத் திட்டத்தின்கீழ், நகா்ப்புறங்களில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கென வாரத்தில் 4 நாள்கள் முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டு வருகிறது. பிற மனுக்களைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத் துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
மேலும், மகளிா் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் இந்த முகாமில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்குகின்றனா். அந்த வகையில்,
கடந்த 15-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 88 ஆயிரத்து 611. அவற்றில் மகளிா் உரிமைத் தொகை கேட்டு, 13 லட்சத்து 72 ஆயிரத்து 679 மனுக்கள் வந்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை மாநிலம் முழுவதும் நடந்த 3561 முகாம்கள் வழியே பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.