‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பயறு வகை சாகுபடி பெருக்கத் திட்டத்தின் கீழ், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு முறையை பாா்வையிட்ட ஆட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ஆயங்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புக்கு செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிப்பதையும், எய்யலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் கல்வித் துறை அதிகாரியுடன் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் மனுக்களை பெற்றாா். பின்னா், தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் ஆா்.சரண்யா, நீா்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளா் காந்தரூபன், கீழணை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநா் சந்தோஷ்குமாா், தமிழ்நாடு மின் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் ஆா்.புகழேந்தி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா், வேளாண் உதவி இயக்குநா் (பொ) உமாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.