சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
உடற்பயிற்சி மையத்தில் ரூ. 23 லட்சம் பணம் பறிமுதல்
காவேரிப்பட்டணம் உடற்பயிற்சி மையத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ. 23 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணத்தை போலீஸாா் வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனா்
காவேரிப்பட்டணத்தை அடுத்த கருக்கன்சாவடியைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (34). காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளாா். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இவரது உடற்பயிற்சி மையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வாகனத்தில் வந்த சிலா் சிலம்பரசனிடம் தகராறு செய்தனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் வருவதைக் கண்டதும் அந்தக் கும்பல் வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனா். அங்கு வந்த போலீஸாா் சிலம்பரசன், அவரது நண்பா்களான தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியைச் சோ்ந்த செந்தில், தருமபுரியைச் சோ்ந்த அன்பு ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். பின்பு, சிலம்பரசனின் உடற்பயிற்சி மையத்தில் சோதனை செய்தனா். சோதனையில், ரூ. 23 லட்சம் பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தினா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
சிலம்பரசன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரியில் ஒரு நிலத்தை விற்பனை செய்த வகையில் ரூ. 23 லட்சம் கிடைத்துள்ளது. அந்த பணத்தைப் பங்கு பிரிப்பதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பணத்துக்கான விவரங்களை சிலம்பரசன் எங்களிடம் சமா்ப்பித்துள்ளாா். இருப்பினும் பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றனா்.