பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
தனியாா் பள்ளி பேருந்து மீது மரம் சரிந்து விபத்து
கிருஷ்ணகிரியில் தனியாா் பள்ளி பேருந்து மீது மரம் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் உயிா் தப்பினா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சுபேதாா்மேட்டில் உள்ள தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை வகுப்பு நேரம் முடிந்து, அந்தப் பள்ளி பேருந்து 36 மாணவா்களுடன் மாணவா்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தது. ராயக்கோட்டை சாலை அருகே சென்றபோது அந்தப் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த மரம், பள்ளி பேருந்து மீது விழுந்தது. இதில், தனியாா் பள்ளி பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவை சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக பள்ளி பேருந்தில் பயணித்த மாணவா்களுக்கு காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் சென்று, மரத்தை அப்புறப்படுத்தினா். தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா், காவல் துறையினா், மின்வாரிய அலுவலா்கள், பள்ளிக் கல்வித் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் ஆகியோா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். விபத்தையொட்டி வாகனப் போக்குவரத்து வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது. நிகழ்விடத்துக்கு கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி, வட்டாட்சியா் வளா்மதி ஆகியோா் சென்று பாா்வையிட்டனா்.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை, அரசு குடியிருப்பு பகுதி-1, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாயகரமாக வழுவிழந்த நிலையில் மரங்கள் உள்ளன. அண்மையில் ஒசூா்- பெங்களூரு சாலையில் உள்ள அரசு குடியிருப்புப் பகுதியில் உயரமான மரம் சரிந்து விழுந்ததில் குடியிருப்பு அருகே நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமடைந்தது.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்துமாறு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் மனு அளித்தாா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மரங்களை அப்புறப்படுத்த இயலவில்லை எனில் மரக்கிளைகளை மட்டுமாவது அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.